Humour, comics, tech, law, software, reviews, essays, articles and HOWTOs intermingled with random philosophy now and then
Filed under:
Entries in Tamil by
Hari
Posted on Tue, Aug 10, 2010 at 14:28 IST (last updated: Wed, Nov 10, 2010 @ 12:17 IST)
ஒரு காலத்தில் பண்டிகைகள் என்றாலே கொண்டாட்டம், பூஜைகள், சிறப்பு வழிபாடுகள், புத்தாடைகள், இனிப்புகள், உறவினர்கள், நண்பர்கள், பல நாட்களுக்கு பள்ளிக்கூட, நிர்வாக விடுமுறைகள் - இவையெல்லாம் கலந்த ஒரு மாபெரும் குடும்ப நிகழ்ச்சிதான். இப்பொழுதெல்லாம் பண்டிகைகளையே நாம் மறந்துவிடுவோம் என்ற நிலைக்கு தாழ்ந்திருக்கிறோம். இந்த சூழ்நிலைக்கு என்ன காரணங்களைச் சுட்டிக்காட்டலாம்?
முதலாவதாக, நகர வாழ்க்கை; இரண்டாவதாக, கூட்டுக்குடும்ப அமைப்புகளின் அழிவு; மூன்றாவதாக, தொலைக்காட்சியின் பாதிப்பு; நான்காவதாக, கலாச்சாரத்தின் சீரழிவு. ஒன்றொன்றாக நான் இந்த காரணங்களை விளக்குகிறேன்.
நகர வாழ்க்கையின் வேகமும், விஞ்ஞான வளர்ச்சிகளும் நம் தேசத்தின் நாட்டுப்புற நடைமுறைகளை கொஞ்சம்-கொஞ்சமாக அழித்துவிட்டன. இப்பொழுதெல்லாம் ஒரு சராசரி குடும்பத்துக்கு முழுமையாக சமைத்து, ரசித்து சாப்பிடுவதற்கே நேரமில்லை. இந்த நிலையில் எப்படி பண்டிகைகளையெல்லாம் கொண்டாடமுடியும்? மேலும் காலப்போக்கில், விலைவாசி உயர்வு மிகவும் அதிகமாகி, நடுத்தர குடும்ப பொருளாதாரங்களை பாதித்துள்ளது. இந்த சூழ்நிலையில் எப்படி பண்டிகைகளுக்கு அதிகமாக செலவு செய்து ஒரு தனிப்பட்ட குடும்பத்தால் கொண்டாடமுடியம்? கொண்டாட வசதியும் விருப்பமும் இருந்தால்கூட, பள்ளிக்கூடங்களும், நிர்வாகங்களும் பண்டிகைகளுக்கு ஒரே நாள்தான் விடுமுறை அளிக்கின்றன. நகர வாழ்க்கையின் வேகத்தில் பண்டிகைகளைக் கொண்டாட நேரம் ஏது?
கூட்டுக்குடும்பங்களும் இந்த காலத்தில் மறைந்துவிட்டன. முன்பெல்லாம் உறவினர்களெல்லாம் ஒரே வீட்டில் சுமுகமாக வாழ்ந்து நல்லது கெட்டதிலெல்லாம் பங்கேற்று ஒற்றுமையாக வாழ்ந்தார்கள். இதனால் எப்பொழுதும் வீட்டில் மக்கள் நடமாட்டம் இருந்தது. கல-கலவென்று குழந்தகளும் விளையாடிக் கொண்டிருப்பார்கள். வீட்டு வேலைகளைச் செய்ய ஆட்களும் அதிகம். இந்த நிலையில் பண்டிகைகளைக் கொண்டாடுவது இயல்பாக அமைந்தது. இந்த காலத்தில் ஒரு வீட்டில் ஒரே சிறுகுடும்பம் வசிப்பதாலும், கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்று உழைப்பதாலும், குழந்தைகளும் நாள்முழுவதும் பள்ளிக்கூடங்களில் இருப்பதாலும், நண்பர்கள் கூடவே வெளியே செல்வதாலும், வீடுகள் பகல் நேரத்தில் பூட்டியுள்ள நிலையில்தான் உள்ளன. இந்நிலையில் எப்படி பண்டிகைகளைக் கொண்டாட முடியும்?
தொலைக்காட்சி எனும் "விஞ்ஞானக்" கருவி இருக்கும் ஒரு சில நல்ல பழக்க-வழக்கங்களையும் மாற்றி விட்டது. முன்பு தீபாவளித்திருநாளில் அதிகாலையில் விழித்து, சூரியன் உதிக்கும்முன் எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு, புத்தாடை அணிந்து, பெரியோர்களை வணங்கி, இனிப்புகளை மற்ற உறவினர்களோடும் நண்பர்களோடும் பகிர்ந்து கொண்டு பட்டாசுகளை குடும்பத்தோடு வெடித்து மகிழ்ந்தோம். இக்காலத்தில் "சன் டீவி"யில் எந்த புதிய படத்தைக் காண்பிக்கிறார்கள் என்ற எண்ணத்தில்தான் தீபாவளியைத் தொடங்குகிறோம்.
அடிப்படையாக, இச்சூழ்நிலைக்கு கலாச்சார சீரழிவுதான் மிக முக்கிய காரணமாகும் என்பது என் கருத்து. இதை நான் குற்றமாகவோ, குறையாகவோ சுட்டிக்காட்டவில்லை. கலாச்சார சீரழிவை ஆராய்வது இந்த கட்டுரையின் நோக்கமில்லை. காலப்போக்கில் வாழ்க்கை முறைகள் மாறுவது இயற்கைதான். பெரும்பாலும் நவீன காலத்தில் பணமும், தொழில்துறை வளர்ச்சியும், பொருளாதார வளமும் முன்னணியில் வைத்துத்தானே வாழ்க்கையின் ஓட்டம்? இந்த ஓட்டப்பந்தயத்தில் வாழ்க்கையின் சிறிய சிறிய இன்பங்களை அனுபவிக்க நேரமேது?
முடிந்த அளவுக்காவது பண்டிகைகளை மரபுவழியாக கொண்டாடுவதை விடாமல் கடைபிடிப்போமே!
2 comment(s)
இந்த காலத்துல பண்டிகை கொண்டாடுனா கூட எதுக்கு கொண்டாடுறோம்ன்னு நிறைய பேருக்கு தெரியல.. ஏதோன்னு தான் இப்போ எல்லாம் கொண்டாடுறாங்க.. முக்கியமா தமிழ் பண்டிகைகளில் இப்பொழுது தவிர்க்க முடியாம ஒரு கலாசாரம் பங்கேடுக்குது.. அது சாராயம்.. அது இல்லாம நம்ம மக்கள் பண்டிகையே கொண்டாடுறது இல்லை.. முக்கயமா சொல்லனும்னா படிக்காத பாமர மக்கள் தான்..
Comment by Logesh (visitor) on Tue, Aug 10, 2010 @ 19:47 IST #
இதெல்லாம் எங்கு நம் நாட்டைக் கொண்டுவிடப்போகுமோ!
Comment by Hari (blog owner) on Tue, Aug 10, 2010 @ 20:01 IST #